தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது.
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. போர் முடிவடைந்ததால் போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. சென்னை மாகாணத்தில் பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர். 1918இல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) உருவாக்கப்பட்டது.

அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு, காயமடைந்தோர்க்கு ஈட்டுத்தொகை மற்றும் உடல் நலக் காப்பீடு ஆகியவை இவற்றில் அடங்கும்.

சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ம. சிங்காரவேலர் (1860-1946) ஆவார். சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர். 1923இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே. அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் தொழிலாளன் (Worker) என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.
இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம்
பொதுவாக, மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும், மேலும் இது ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் உணர்வுகளுடன் இயைந்து நிற்பது. தமிழ்மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனது மேன்மையை மீட்டுப் பெற்றது. மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன. திராவிட உணர்வுக்கு இட்டுச் சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் அதன் கலை வடிவங்களுடைய வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச் செய்தது. ஆகம கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் தமிழில் செய்யப்படுவதில்லை. இசை நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாடல்கள் ஓரளவிலான இடத்தையே பெற்றிருந்தன. ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசை வரலாற்றை முறையாகக் கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார். 1912இல் தஞ்சாவூர் ‘சங்கீத வித்யா மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள் பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம் வழங்கியது. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943இல் முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் வெவ்வேறு காலப்பகுதிகளில் இந்தி கட்டாயமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது தமிழ்மொழிக்கும், பண்பாட்டிற்குமான அச்சுறுத்தலாகவே கருதப்பட்டது. தமிழுக்கு மேலாக இந்தியை அறிமுகம் செய்வது திராவிடர்களுக்கான வேலைவாய்ப்புகளை மறுப்பதாக அமையுமென பெரியார் அறிவித்தார். இந்திமொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக் காட்டினார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்தை பிராமணியத்திற்கும் தமிழின் மீதான சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான கருத்தியல் போராகவே கருதினர்.
Comments
Post a Comment