10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : சுயமரியாதை இயக்கம்
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைத் கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இணைப்பதில் அக்கறை செலுத்திய அவர்கள் இந்தியச் சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர். புதிய வருவாய் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேயரின் பயன்பாட்டுக் கோட்பாடுகள், கிறித்தவ சமய நெறிகள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த அவர்கள், இந்திய மக்களின் மீது தங்களது பண்பாட்டு மேலாதிக்கத்தைத் திணிக்கவும் முயன்றனர்.
இந்நிலை இந்தியர்களிடையே எதிர்விளைவினை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் இந்த அவமானத்தை உணர்ந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கள் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கடந்த காலத்தினுள் தேடினர். இருந்தபோதிலும் காலனிய விவாதங்களில் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும் தயாராயினர். இதன் விளைவே நவீன இந்தியாவின் சமய, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிகோலியது. இக்குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சி நிகழ்வு “இந்திய மறுமலர்ச்சி" என அடையாளப்படுத்தப்பட்டது.
மறுமலர்ச்சியானது ஒரு கருத்தியல் பண்பாட்டு நிகழ்வாகும். அது நவீனம், பகுத்தறிவு, சமூகத்தின் முற்போக்கான இயக்கம் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. திறனாய்வுச் சிந்தனை அதன் வேர்களில் உள்ளது. மனிதநேயம் எனும் இச்சித்தாந்தம், சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைப்பாற்றலைத் தூண்டி எழுப்பியது.
தமிழ் மறுமலர்ச்சி
காலனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் மனிதநேயத்தின் எழுச்சியும் இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகப் - பண்பாட்டு வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாற்று மாற்றத்தை அனுபவித்தது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களின் அடையாள கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின. அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின. சமயச்சார்பற்ற எனச் சொல்லத்தகுந்த நூல்களும் வெளியிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகை
ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும். மிக முன்னதாக 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது. 1709இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. இதன் விளைவாக இக்காலப் பகுதியில் மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரனார் (1832-1901), உ. வே. சாமிநாதர் (1855-1942) போன்றவர்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர். சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும். தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பா மாலை (1895), மணிமேகலை (1898), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நவீனத் தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக கண்டறிந்தனர். அவை மொத்தத்தில் சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன.
1816 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் (1777-1819), தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ - ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார். ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார். திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

இக்காலகட்டத்தைச் சேர்ந்த அறிவார்ந்த தமிழர்கள் தமிழ் / திராவிட / சமத்துவம் மற்றும் சமஸ்கிருதம் / ஆரியம் / பிராமணியம் ஆகிய இரண்டுக்குமிடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர். தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது. இச்சிந்தனைகள் பி. சுந்தரனாரால் (1855-1897) எழுதப்பெற்ற மனோன்மணியம் எனும் நாடக நூலில் இடம் பெற்றுள்ள தமிழ்மொழி வாழ்த்துப் பாடலில் மெய்பிக்கப்பட்டுள்ளது.


வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் (1823-1874) நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார். ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார். சி.வை. தாமோதரனார், உவே. சாமிநாதர், திரு.வி. கல்யாண சுந்தரம் (1883-1953), பரிதிமாற் கலைஞர் (18701903), மறைமலையடிகள் (1876-1950), சுப்பிரமணிய பாரதி (1882-1921), ச.வையாபுரி (1891-1956), கவிஞர் பாரதிதாசன் (18911964) ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர். இதே சமயத்தில், பௌத்தத்திற்குப் புத்துயிரளித்த ஒரு தொடக்ககால முன்னோடியான M. சிங்காரவேலர் (1860-1946) காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார். பண்டிதர் அயோத்திதாசரும் (1845-1914) பெரியார் ஈ.வெ. ராமசாமியும் (1879-1973) சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.
பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி)
வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி (18701903) மதுரை அருகே பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த செல்வாக்கை அடையாளம் கண்ட தொடக்க காலத் தமிழ் அறிஞர்களில் ஒருவர். அதனால் தனக்கே பரிதிமாற் கலைஞர் என தூய. தமிழ்ப் பெயரைச் சூடிக் கொண்டவர். தமிழ் மொழி ஒரு செம்மொழி என்றும், எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டாரமொழியென அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர் அவரே. மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 14 வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார். மேலும் இவர் நாவல்களையும் நாடகங்களையும் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் கட்டுரைகளையும் எழுதினார். ஆனால் வருந்தத்தக்க முறையில் 33 ஆண்டுகளே நிறைவு பெற்றிருந்த அவர் இளம் வயதில் இயற்கை எய்தினார்.

மறைமலை அடிகள்
மறைமலை அடிகள் (1876-1950) தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை (தூய தமிழ் இயக்கம்) உருவாக்கியவர் எனவும் கருதப்படுகின்றார். சங்க இலக்கிய நூல்களான பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.

அவர் இளைஞராக இருந்த போது சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்தார். பின்னர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டார். அவருடைய ஆசிரியர்களான பி. சுந்தரனார், சோமசுந்தர நாயகர் ஆகிய இருவரும் அவருடைய வாழ்க்கையில் முக்கியச் செல்வாக்கு செலுத்தியோராவர்.
தனித்தமிழ் இயக்கம்
தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார். இவ்வியக்கம் தமிழ்ப் பண்பாட்டின் மீது குறிப்பாக தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை இவ்வியக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார். வேதாச்சலம் என்ற தனது பெயரை அவர் தூய தமிழில் மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார். அவருடைய ஞானசாகரம் எனும் பத்திரிக்கை அறிவுக்கடல் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவருடைய சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் பொது நிலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது. தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள் தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
Comments
Post a Comment